சிவபெருமான் யானைக்கு அருள் செய்ததால் 'ஆனைக்கா' என்று பெயர் பெற்றது. முற்காலத்தில் வெண்நாவல் மரங்கள் நிறைந்த வனத்தில் ஒரு முனிவர் தவம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நாவல் பழம் கீழே விழ, முனிவர் அதை இறைவனுக்கு நிவேதனம் செய்து பிரசாதமாக உண்டார். பழத்தை கொட்டையுடன் உண்டதால் சிவபெருமானின் திருவிளையாடலால் முனிவர் தலைமேல் மரம் முளைத்தது. முனிவர் சிவனை வேண்ட, பழைய உருவத்தை அவருக்கு அளித்து ஐம்புலிங்கமாக இத்தலத்தில் அமர்ந்தார். அதனால் இத்தலத்து மூலவர் 'ஐம்புகேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
மூலவர் 'ஐம்புகேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், சிறிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். பஞ்சபூதத் தலங்களுள் அப்பு (நீர்) தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகிய இரண்டு நதிகளுக்கிடையே இக்கோயில் இருப்பதால் மூலவர் சன்னதியில் எப்போதும் தண்ணீர் கசிந்துக் கொண்டே இருக்கும்.
அம்பிகை 'அகிலாண்டேஸ்வரி' என்ற திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். இங்கு அம்பிகை ஈசனை பூஜை செய்வதாக ஐதீகம். அதனால் உச்சிகால பூஜையின்போது அர்ச்சகர் பெண்வேடம் தரித்து சுவாமி சன்னதிக்குச் சென்று பூஜை செய்து பின்னர் கோபூஜை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. இது அனைவரும் காண வேண்டிய ஒன்று.
அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இத்தலமும் ஒன்று. சிவபெருமான், அம்பிகைக்கு உபதேசம் செய்து, அம்பாள் ஞானம் பெற்றதால் இத்தலம் 'ஞான பீடத் தலம்' என்று அழைக்கப்படுகிறது. ஆதிசங்கரர் இத்தலத்து அம்பிகையின் காதுகளில் ஸ்ரீசக்ர தாடங்கம் அணிவித்த தலம்.
திருக்கயிலாயத்தில் புஷ்பதந்தன், மால்யவான் என்ற இருகணங்கள் சிவத் தொண்டாற்றுவதில் போட்டியிட்டு பெருமை கொண்டு முறையே யானையாகவும், சிலந்தியாகவும் சபித்துக் கொண்டனர். தவறை உணர்ந்த இருவரும் சிவபெருமானை வேண்ட, வெண் நாவல் வனத்திற்குச் சென்று வழிபட, முக்தி கிடைக்கும் என்றார். யானை பூவும், நீரும் கொண்டு ஜம்புலிங்கத்தை பூசை செய்ய, சிலந்தி மரச் சருகுகள் விழாமல் வலை பின்னியது.
வலையை யானை அழிக்க, சிலந்தி மீண்டும் பின்னியது. இது தொடர, சிலந்தி யானையின் துதிக்கைக்குள் புகுந்து யானை கடித்தது. இதனால் யானையும், சிலந்தியும் இறந்தன. இறைவன் காட்சி தந்து இருவருக்கும் சாபவிமோசனம் தந்து புஷ்பதந்தனை மீண்டும் சிவகணமாகவும், மால்யவானை சோழ அரசனாக பிறக்கும்படியும் அருளினார். அவனே கோட்செங்கட்சோழனாகப் பிறந்து யானை செல்ல முடியாத 70 மாடக்கோயில்களைக் கட்டி சிவபதவி அடைந்தான்.
இக்கோயிலின் ஐந்தாம் பிரகாரம் 'திருநீற்றான் மதில்' என்று அழைக்கப்படுகிறது. இம்மதிலைக் கட்டியபோது வேலை செய்தவர்களுக்கு கொடுக்க கூலி குறைந்ததால் சிவபெருமான் சித்தராக வந்து திருநீற்றினைக் கொடுக்க, அது பொன்னாக மாறிய தலம்.
இக்கோயிலில் பங்குனி மாத சித்திரை நட்சத்திரத்தன்று பஞ்சப் பிரகார விழா எனும் விழா சிறப்பாக நடைபெறும். அப்போது சுவாமி அம்மன் வேடமும், அம்பிகை சுவாமி வேடமும் தரித்து உலாவந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
அம்பிகை, திருமால், பிரம்மா, இராமர், இந்திரன், சூரியன், சந்திரன், குபேரன், அக்கினி, அஷ்டவசுக்கள், அகத்தியர், கௌதம முனிவர், பராசர முனிவர், சம்பு முனிவர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழால் போற்றி வணங்கியுள்ளார்.
திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|